Published : 21 Jul 2022 07:26 AM
Last Updated : 21 Jul 2022 07:26 AM
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பான மத்திய அரசின் கேள்விகளுக்கு, உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட உணவுக்கூடம், மருத்துவ மாணவர்களுக்கான திறன் ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.
தொடர்ந்து, 10,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள், சிகிச்சைகள்செய்யப்பட்டதை முன்னிட்டு,இதயவியல் துறை மருத்துவர்களை கவுரவித்ததுடன், இதய நோய் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியையும் பார்வையிட்டார்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கை, கால் இழந்த 6 பேருக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பிலான செயற்கை கை, கால்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மேயர்ஆர்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, சுகாதாரத் துறைச்செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, கோவை கங்கா மருத்துவமனை இயக்குநர் ராஜசபாபதி, சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா, மண்டலத் தலைவர் ராமலு, கவுன்சிலர் கீதாசுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். ஆளுநர் வழியாக தமிழக சட்டத் துறைக்கு, மத்திய அரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
நீட் தேர்வு, தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக மத்தியஅரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம். மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும்.
அதேபோல, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்துவிலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் தயாரான பதிலுக்கு, முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT