Published : 20 Jul 2022 06:55 AM
Last Updated : 20 Jul 2022 06:55 AM

தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம்: காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் விசாரணை நடத்திய கோட்டாட்சியர் கயல்விழி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை தனியார் பள்ளிமாணவர் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தை தொடர்ந்து பள்ளியில் கோட்டாச்சியர் கனிமொழி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இஷிகாந்த்(16). இவர் ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென்று நேற்றுமுன்தினம் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்றார்.

பலத்த காயமடைந்த இவர் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பள்ளியில் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கோட்டாட்சியர் கனிமொழியிடம் கேட்டபோது, “பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். மாணவர்கள் இதுபோல் தற்கொலைக்கு முயல்வதை தடுக்கசிறப்பு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் நீதித்துறை நடுவர் வாக்கு மூலம் பெற்றுள்ளார். அந்த வாக்கு மூலத்தை அவர் காஞ்சிபுரம் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்படும்” என்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, “பள்ளி மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணத்தை தடுக்க கவுன்சிலிங் நடத்த உள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x