Published : 11 May 2016 12:22 PM
Last Updated : 11 May 2016 12:22 PM

மே 14-ல் போலீஸ் உதவியுடன் அதிமுக பணப் பட்டுவாடா: தேர்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்

'தமிழகத்தில் இம்மாதம் 14-ம் தேதி இரவு காவல்துறை உதவியுடன் வாக்காளர்களுக்கு பணம் வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள், விதிமீறல்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற திட்டமிட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வரை வழங்க அ.தி.மு.க. திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று பதுக்கி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் இணைந்து நடத்திய சோதனைகளில் ரூ.85 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதே இதற்கு சாட்சியாகும். அதேநேரத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டதை விட பல மடங்கு பணத்தை அ.தி.மு.க. தமிழகத்தின் பல பகுதிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுக்கு இணையாக திமுகவும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணத்தை வாரியிறைக்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருந்தால் அவர்களின் வாக்குகளைப் பெற இரு சக்கர ஊர்திகள் லஞ்சமாக வழங்கப்படுகின்றன. இதைக் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு முதற்கட்ட பணம் வினியோகம் தொடங்கிவிட்டது. ஊடக செய்திகளும் இதை உறுதி செய்துள்ளன.

அடுத்தக்கட்டமாக வாக்குப்பதிவு நாளுக்கு இரு நாட்களுக்கு முன்பாக, அதாவது வரும் 14-ஆம் தேதி இரவு அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டு காவல்துறை உதவியுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 14-ஆம் தேதி மாலை பிரச்சாரம் முடிவடைந்தவுடன் தமிழகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய துணை ராணுவப் படையினர் அனைவரும் ஆலோசனை என்ற பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாதுகாப்பு பணிக்கு திரும்புவதற்குள்ளாக உள்ளூர் காவல்துறை உதவியுடன் பணத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சென்று பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான அதிமுக மற்றும் திமுகவின் முயற்சிகளை முறியடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய துணை இராணுவப்படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான உத்தரவுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x