Published : 15 Jul 2022 07:46 AM
Last Updated : 15 Jul 2022 07:46 AM
சென்னை: அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை அடைத்து நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் - அரிசி வணிகர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் துளசிங்கம், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வணிகப் பெயரில் அல்லாமல் பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் 18-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. அரிசிக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும்.
எனவே, அரிசிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி (நாளை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய தினம் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்தவிற்பனை கடைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்படும்.
கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரேதசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரிசி வணிகர்கள் அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சிவானந்தன், திருச்சியில் நேற்று கூறியதாவது: நம் நாட்டில் அரிசிதான் ஏழை, நடுத்தர மக்களின் தினசரி பிரதான உணவு. இந்த நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏற்புடையது அல்ல. இதனால், அரிசி கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரும்.
எனவே, இந்த வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள 3,000 அரிசி ஆலைகள் சார்பில் வரும் 16-ம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT