Published : 15 Jul 2022 06:15 AM
Last Updated : 15 Jul 2022 06:15 AM

கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காட்ட வேண்டும்; சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்க கூடாது: மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை அல்லது பழைய பயண அட்டையைக் காண்பிக்கும் மாணவர்களை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சீருடையில் உள்ள மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கினால் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிர்வாகத்தின் மேலாண் இயக்குநர் அனைத்துகிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2022-23 கல்வியாண்டில், மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கான விவரங்களைச் சேகரித்து, அச்சடித்து வழங்க சிறிது காலம் ஆகும்.

அதுவரை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடியஅடையாள அட்டையை மாநகரபோக்குவரத்துக் கழக நடத்துநர்களிடம் காண்பிக்கும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதேபோல், அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி, அரசு இசைக்கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலைமற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்), அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ஆகியோர் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,2019-20 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்துபயண அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து, இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கட்டணமில்லா பயணஅட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும்படி மீண்டும் உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை பேருந்துகளில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x