Published : 29 May 2016 02:22 PM
Last Updated : 29 May 2016 02:22 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50% ஏழை மாணவர்கள் உயர் கல்விக்கு முழுக்கு

தி.மலை மாவட்டம் கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்து நிலையிலும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாயமும் நலிந்து வருவதால் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது. வேலையின்மை காரணமாக, ஜவ்வாது மலையில் வாழும் மக்கள் செம்மரம் வெட்டவும் செங்கல் சூளை, கட்டுமானம், கரும்பு வெட்டும் தொழிலுக்காகவும் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், கூலித் தொழிலாளர்கள் மற்றும் அதற்கு அடுத்து நிலையில் உள்ள வர்களின் பிள்ளைகளுக்கு பள்ளிக் கல்வி என்பது சிம்ம சொப்பனமாக உள்ளது. பள்ளிக் கல்வியைத் தாண்டினால், உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் செயல்பாடுகளே காரணமாகிவிட்டது. அரசாங்கம் நடத்தக்கூடிய கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பள்ளிக் கல்வியைக் கடக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கு, உயர்கல்வி என்பது கானல் நீரானதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே செல்கின்றனர். அவர்களில் 75 சதவீத மாணவர்கள், அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கவில்லை. அதற்கு, பொருளாதாரப் பிரச் சினை முக்கிய காரணமாக உள்ளது. குடும்பச் சுமையை சுமக்கும் மாணவர்களும் உள்ளனர். உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்களுக்கான பாதையை அரசாங்கம் எளிதாக அமைத்துக் கொடுக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் அரசாங்க கல்லூரிகள் இயங்குகின்றன.

திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் அரசு கலைக் கல்லூரி, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, செங்கம் அருகே நாகப்பாடியில் அரசு தொழில் நுட்பக் கல்லூரி, வாழவச்சனூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி, தி.மலையில் அரசு ஐடிஐ, ஜமுனாமரத்தூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு ஐடிஐ, தி.மலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, வந்தவாசி அருகே தென்னாங்கூர் என்ற இடத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் கலைக்கல்லூரி மட்டுமே உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதில், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும்போது வெளி மாவட்ட மாணவர்களும் இடம்பெறு கின்றனர். அதேநேரத்தில், புற்றீசல் போல் தனியார் கல்லூரிகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கல்லூரிகளும், தங்களது அந்தஸ்துக்கு ஏற்ப, உச்சத்தை தொடும் அளவுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றன. அதனால், அடித்தட்டு மாணவ மாணவிகளால் தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுவே, அவர்களது உயர்கல்வி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் அடியெடுத்து வைக்க முடியாமல், பள்ளி படிப்போடு முழுக்கு போட்டுவிடுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் 40 - 50 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x