Published : 10 Jul 2022 04:46 AM
Last Updated : 10 Jul 2022 04:46 AM
திருச்சி: துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்தபோது சசிகலாவின் கார் மீது அங்கிருந்த தானியங்கி வேகத்தடுப்பு கட்டை இடித்தது. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் விழுப்புரத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, இரவில் கார் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். அவருடன் 10-க்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்கள் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11.45மணியளவில் துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக சசிகலாவின் கார் சென்றபோது, அங்கிருந்த தானியங்கி வேகத்தடுப்புக் கட்டை கீழே இறங்கி, அவரது காரில் இடித்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த சசிகலா, தனது காரை நிறுத்துமாறு கூறினார். இதேபோல ஏற்கெனவே 2 முறை தனது காரில் தடுப்புக் கட்டை மோதியுள்ளதாக தனது ஆதரவாளர்களிடம் சசிகலா கூறியுள்ளார். இதையடுத்து, சசிகலாவின் ஆதரவாளர்கள் தங்களின் கார்களை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சசிகலா வந்திருப்பதையறிந்த துவாக்குடி, திருவெறும்பூர், வல்லம் பகுதிகளைச் சேர்ந்த அமமுகவினரும் அங்கு திரண்டனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சந்திரமோகன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, சசிகலா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டதுடன், இனி இதுபோல நிகழாமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சசிகலா, நள்ளிரவு ஒருமணியளவில், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து காவல் அதிகாாிகளிடம் கேட்டபோது, “துவாக்குடி சுங்கச்சாவடியில் விஐபிக்கள் வருகைக்காக உள்ள தனிப் பாதையில், தானியங்கி வேகத் தடுப்புக்கட்டையை கையால் இயக்க முடியும். ஆனால், அந்தப் பாதை வழியாக சசிகலா பயணிக்காமல், பாஸ்டேக் பாதையில் வந்துவிட்டார். அங்குள்ள தானியங்கி வேகத்தடுப்பு கட்டை ஒவ்வொரு வாகனத்துக்கும் கீழே இறங்கி, மேலே ஏறும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் உடனடியாக மாற்றம் செய்ய அங்கிருந்த ஊழியருக்கு தெரியாததால், கார் மீது வேகத்தடுப்புக் கட்டை இடித்துள்ளது. இதுதொடர்பாக, சசிகலா தரப்பிலிருந்து யாரும் புகார் தெரிவிக்காததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT