Published : 09 Jul 2022 07:07 AM
Last Updated : 09 Jul 2022 07:07 AM
திருவாரூர்: தனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் நகை, பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
மன்னார்குடியில் உள்ள தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சோதனை அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கை. வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது போன்ற சோதனைகளை நடத்தி பொதுக்குழுவை சிறுமைப்படுத்த ஆளுங்கட்சி எண்ணுகிறது.
தமிழகம் முழுவதும் இப்போது அதிமுக பொதுக்குழு குறித்து தான் அதிகளவில் பேசப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தங்களுக்கு சங்கடமாகிவிடும் என சில கட்சிகள் நினைக்கின்றன. அதன் எதிரொலியாகவே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கிறது.
எனது வீட்டில் நடைபெற்ற சோதனையில் நகைகளோ, ஆவணங்களோ, பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. ரூ.60 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டு சென்று விட்டனர். இதனை சோதனையிட்ட அதிகாரிகள் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்றார்.
சொத்துக்கு மேல் கடன்
அப்போது அவரிடம், 2015-க்கு முன் உங்கள் (காமராஜ்) சொத்து மதிப்பு ரூ.1 கோடி அளவில் இருந்ததாகவும், தற்போது ரூ.60 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவர்கள் கூறியிருப்பதை விட எனக்கு கூடுதலாக கடன் உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT