Published : 08 Jul 2022 06:09 AM
Last Updated : 08 Jul 2022 06:09 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8-ம் தேதி) வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக, கீழ்பென்னாத்தூர் அருகே உள்ளஆராஞ்சி கிராமத்தில் இன்று முற்பகலில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் அவர், திருவண்ணாமலையில் ஓய்வெடுக்கிறார். அதன்பின்னர், திருவண்ணாமலை பெரிய தெருவில், சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்கவுள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு
இதையடுத்து, முதல் நாள் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக திமுக சார்பில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே மாலை6 மணியளவில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் பங்கேற்கஉள்ளார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மற்றும் அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து 2-ம் நாளானநாளை (9-ம் தேதி) திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில்கலந்துகொள்கிறார்.
பின்னர், நகராட்சி பள்ளி எதிரே நடைபெறஉள்ள, அரசு விழாவில் பங்கேற்று பல ஆயிரம் கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். மேலும், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முதல்வர் வருகையையொட்டி புதிய சாலைகள் அமைக்கப்பட்டுஉள்ளன. விழா நடைபெறவுள்ள இடங்களில் அரங்கு உள்ளிட்ட பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, 4-வது நாளாக நேற்றும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT