Published : 07 Jul 2022 07:30 AM
Last Updated : 07 Jul 2022 07:30 AM

அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 62 சதவீத மாணவர்கள் தோல்வி

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா பரவலால் கடந்த கல்வியாண்டு கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பரில்தான் வகுப்புகள் தொடங்கின. இதனால் நவம்பரில் நடைபெற வேண்டிய பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நேரடி முறையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வை சுமார் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின. இதில், பருவத் தேர்வு எழுதிய முதலாமாண்டு பொறியியல் மாணவர்களில் 38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 62 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை. பேராசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், அதற்குமுந்தைய ஆண்டு கரோனா பரவலால் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவில்லை. பிளஸ்-2 வகுப்பிலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை. அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டு, முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதன்மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் என்பதால், பாடங்களைப் புரிந்து கொள்ள பெரிதும் சிரமப்பட்டனர். குறிப்பாக, கணித பாடத்தில்தான் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும், பருவத்தேர்வு இணையவழி அல்லது நேரடி முறையில் நடத்தப்படுமா என்ற குழப்பமும் மாணவர்கள் மத்தியில் நிலவியது. இறுதியில் நேரடித் தேர்வு நடத்தப்பட்டது. இதுவும் தேர்ச்சி குறைய காரணமாகும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x