Published : 10 May 2016 08:53 AM
Last Updated : 10 May 2016 08:53 AM

ட்விட்டரில் பதிலளிக்கும் விஜயகாந்த் மக்கள் முன்பு பதில் சொல்வாரா?- நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி

அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்துவரும் நடிகர் ஆனந்த்ராஜ், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

இம்முறை தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறதே...

"அம்மா சொன்னதைச் செய்வார். திமுக எதையும் செய்யமாட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். கடுமையான போட்டி எல்லாம் கிடையாது. ஜெயலலிதாதான் வெல்வார் என்று கர்நாடகாவில் இருக்கும் எடியூரப்பாவே சொல்கிறார்.

ஆனால், 'நமக்கு நாமே' மூலம் ஸ்டாலின் மக்களிடம் நேரடியாக சந்தித்ததால் செல்வாக்கு அதிகரித்துவிட்டது என்று திமுகவினர் சொல்கிறார்களே..?

"மிகப் பெரிய பொய். தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னால் போய் நடந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர் நடந்ததை எல்லாம் யாருமே கண்டு கொள்ளவில்லை. நமக்கு நாமே திட்டம் என்பது ஸ்டாலினுக்காக ஸ்டாலின் செய்த திட்டம்தான். திமுகவில் இருக்கும் சிலர் என்னிடம் "இது திமுகவின் கலாச்சாரமே இல்ல" என்று வருத்தப்பட்டார்கள். 'நமக்கு நாமே' என்று நடக்கும் ஸ்டாலின், இன்னொரு பக்கம் அழகிரியை நடக்கச் சொல்லுங்களேன்.

இன்னொரு பக்கம் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக கொண்ட தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி மிகவும் தீவிரம் காட்டுகிறார்களே...

அழிஞ்சுப் போக நினைக்கும் ஒருவர் தனியாக போக மாட்டார். கூட்டத்தோடு போக வேண்டும் என்று தான் நினைப்பார். இருட்டில் போகும்போது தனியாக அல்லாமல் கூட யாரையாவது அழைத்துக் கொண்டு போவார்கள். அதுதான் இந்தக் கூட்டணி. ஆனால், அக்கூட்டணியின் திட்டம் என்னவென்றால் ஜெயலலிதா முதலமைச்சராக வருவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால், ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். பாஜக உடன் விஜயகாந்த் சென்றிருந்தால் விஜயகாந்தை அடையாளம் கண்டுவிடுவார்கள். வெறும் 5% வாக்குகள் மட்டுமே கிடைத்தால் அவருடைய வேஷம் கலைந்துவிடும். மக்கள் நலக் கூட்டணி என்று சொல்லும்போது 10%-ல் இருந்து 15% வரை வாங்க முடியும். வாக்கு வங்கி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் எண்ணம்.

சினிமாவில் நட்பு... அரசியலில் எதிரணி... விஜயகாந்த்?

திரைப்பட நடிகராக அவரும் நானும் நெருங்கி பழகி இருக்கிறோம். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் நுழையும்போது ஒன்று பேசுவது, பிறகு ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசுகிறார். விஜயகாந்த் முதல்வர் ஆவார் என்று வைகோ போன்றவர்கள் சொல்வது மிகப் பெரிய அபத்தம். எங்கு போய் பதவியேற்க போகிறார் என்பதை மக்கள் பார்க்கத் தானே போகிறார்கள். வைகோ முதல்வர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட கொஞ்சம் அதிக வாக்குகள் பெற்றிருக்க முடியும். எதற்காக அவர் நிற்கவில்லை என்று அவருடைய கட்சிக்காரர்களே குழப்பத்தில் இருக்கிறார்கள். திருமாவளவன் கட்சி, வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி இந்த மூன்று கட்சிக்கும் உள்ளுக்குள் ஒரு பனிப்போர் இருப்பது ஊரறிந்த விஷயம். வைகோ, திருமாவளவன் அந்த நேரத்திற்காக மட்டுமே விஜயகாந்த்தை பாராட்டி பேசுகிறார்கள். மூன்று பேருமே மூன்று கோணத்தில் பேசுபவர்கள். அவர்கள் இவ்வாறு பேசுவதே அவர்களுக்கு தப்பாக திரும்பி கொண்டிருக்கிறது.

எதிரணியில் இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டுகிறார்கள். விஜயகாந்த் கூட ட்விட்டரில் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்...

அது ஒரு மிகப்பெரிய பொய். ட்விட்டரில் பதிலளித்த விஜயகாந்த் எங்கே மக்கள் முன்னால் வந்து பதிலளிக்கச் சொல்லுங்கள். ட்விட்டர் தளத்தில் யாரோ பதிலளித்துக் கொண்டிருக்கிறார். இதே பதிலை விஜயகாந்த்தை மக்கள் மத்தியில் சொல்லச் சொல்லுங்கள் என்கிறேன். இது ஒரு திருட்டு பரீட்சை எழுதுவது போலத் தான். மாணவர்கள் உள்ளிட்ட அனைவருமே கேட்கும் கேள்விகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்க விஜயகாந்த் தயாரா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x