Published : 07 Jul 2022 07:06 AM
Last Updated : 07 Jul 2022 07:06 AM
சென்னை: ‘எக்ஸ்னோரா’ அமைப்பின் நிறுவனரான நிர்மலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார்.
அரசு சாரா சுற்றுச்சூழல் சேவை அமைப்பான எக்ஸ்னோரா கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமூக ஆர்வலரான எம்.பி.நிர்மலால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இயற்கையை காப்பதுடன், சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் பணிகளில் இந்த எக்ஸ்னோரா கவனம்செலுத்தி வருகிறது.
கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, தொடர்ந்து மேற்கொண்டு வரும்இந்த அமைப்பு, பம்மல் நகராட்சியில் தொடங்கி, சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 -வது தளத்தில் உள்ள நிர்மலின் வீட்டுக்குச்சென்று அவருக்கு ஆச்சரியமளித்தார்.
நிர்மல் அருகில் ஒரே சோபாவில் அமர்ந்து அவருடன் பேசியதுடன், அவர் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, முதல்வருடன் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சென்றிருந்தனர்.
முதல்வருடனான சந்திப்பு குறித்து எக்ஸ்னோரா நிர்மலிடம் கேட்டபோது,”எனக்கு தற்போது 79 வயதாகிறது. நான் தான் முதல்வரை நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அவர் இரண்டு முறை வருவதாகத் தெரிவித்து, வர இயலாத நிலையில் திடீரெனஎன்னை சந்திக்க வந்தது ஆச்சரியப்படுத்தியது.
அவர் என் உடல்நிலை குறித்து விசாரித்தார். அத்துடன், ‘வீட்டில் அம்மா இல்லையா?’ என கேட்டு அவர்களையும் விசாரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பல்வேறு விஷயங்கள் குறித்து 30 நிமிடங்கள் என்னுடன் பேசி விட்டுச் சென்றார். நான் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை பொதுவெளியில் உணர்த்தியவர் அவர். இதுவரை நான் பார்த்ததில் இவர்தான் மிகவும் எளிமையான முதல்வர். என்னை வீட்டில் வந்து சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT