Published : 04 Jul 2022 06:24 AM
Last Updated : 04 Jul 2022 06:24 AM
சென்னை: ஆயிரம் விளக்கில் உள்ள கணினி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளர்.
சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின், முதல் மாடியில், கணினி பழுது பார்க்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கணினி, லேப் டாப், சிசிடிவி உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.45 மணியளவில், கணினி நிறுவனத்தில், திடீரென தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்தனர்.
ராட்சத ஏணியில் ஏறி தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு இருவர் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். ஆயிரம் விளக்கு போலீஸார், இருவரின் உடல்களை கைப்பற்றி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (41), அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் வீடு, அலுவலகங்களுக்கு தரை விரிப்பு போடும் பணியை செய்து வந்தனர். சனிக்கிழமை இரவு, கணினி நிறுவனத்துக்கு, தரை விரிப்பு பணிக்கு வந்து, பின்னர், அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி இருவரும் இறந்தது தெரியவந்துள்ளதாக ஆயிரம் விளக்கு போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT