Published : 04 Jul 2022 06:01 AM
Last Updated : 04 Jul 2022 06:01 AM
நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரையுமன் துறையில் கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மக்களை சந்தித்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று, கடல் சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆழிக்கால் மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதுபோல் இரையுமன்துறை மீனவ கிராமத்திலும் கடல் சீற்றத்தினால் பேரலைகள் எழுந்ததையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரையுமன்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்தார். பின்னர் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் கடல்நீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டார்.
கடல் சீற்றத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லும் சூழ்நிலை நிலவுவதால் சேதமடைந்த கடலரிப்பு தடுப்புச் சுவர்களை துரிதமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT