Published : 17 May 2016 10:00 AM
Last Updated : 17 May 2016 10:00 AM

பணப் பட்டுவாடாவை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி: தலைவர்கள் கருத்து

சட்டப்பேரவைத் தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்ததாக பல்வேறு கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம்

காரைக்குடி அருகே கண்டனூரில் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப் பள்ளியில் ப.சிதம்பரம் நேற்று காலை வாக்களித்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாக அறுதிப் பெரும்பான்மை பெறும். திமுக அரசு அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் கடந்த 10 நாளாக படிக்கக்கூடிய நாளிதழ்களில் மிகமிகப் பெரும் பகுதி அதிமுகவினரின் வீடுகளிலேதான் பணம் பறிமுதல் செய்யப்பட்டிக்கிறது. அதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த தேர்தலிலே, கடந்த தேர்தல் போலவே அதிமுக நிறைய பணம் தந்திருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்காதது, தேர்தல் கமிஷனின் தோல்வி என்றுதான் நான் கருதுகிறேன். பணம் கொடுப்பதையும், பணம் வாங்குவதையும் தடுத்திருக்க வேண்டும். இதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஆகவே இது தேர்தல் கமிஷனின் தோல்விதான். இவ்வாறு அவர் கூறினார்.

இளங்கோவன்

ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் நேற்று காலை தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறும் போது, ‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிமுக வேட் பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலுக்கு பின் அவர்கள் வெற்றி பெற்றாலும், அவர்களை நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார்.

வைகோ

திருநெல்வேலி மாவட்டம், கலிங் கப்பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வைகோ வாக்களித்தார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பண பிரளயம் நடத்தியிருக்கின்றன. சென்னை ஆவடி தொகுதியில் அனைத்து வாக்காளர் செல் பேசிகளுக்கும் அதிமுகவினர் தலா ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துள் ளனர். நாட்டிலேயே தமிழகத்தை தலை குனிய வைக்கும் வகையில் அரவக் குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுதி களில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடத்தப் படும் என்ற முடிவை தேர்தல் ஆணையம் கைவிட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு முந் தைய நாளான வரும் 18-ம் தேதியே அங்கு தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸ், அன்புமணி

திண்டிவனம் மரகாதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வாக் களித்தனர்.

பின்னர் கொட்டும் மழையில் நிருபர்களிடம் ராமதாஸ், அன்புமணி கூறியதாவது: பணம் கொடுக்கும் திமுக, அதிமுக வேட் பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவில்லை. அதனால் மக்கள் ஒருவித ஆத்திரத்தோடு எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் பிடியில் இருந்து விடுபடும் நாள் இது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் பாமக ஆட்சி நடக்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இரா.முத்தரசன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள வேளூர் உதவி பெறும் தொடக்கப் பள்ளி மையத்தில் வாக்களித்த இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தி யாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக் கப் பட்டிருந்தாலும், 234 தொகுதிக ளிலுமே பணப்பட்டுவாடா நடந்துள் ளது. இதை கட்டுப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது.

நான் வாக்களிக்கச் சென்றபோது, வாக்குப்பதிவு மையத்தில் மின்சாரம் இல்லை. மழை காரணமாக மின் சாரம் தடைபட்டிருக்கலாம் அல்லது வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டி ருத்திருக்கலாம். வாக்குச்சாவடியில் ஜெனரேட்டர் உள்ளிட்ட எந்த மாற்று ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை. டார்ச் லைட் வெளிச் சத்தைக் கொண்டுதான் நான் வாக்க ளித்தேன். இந்தத் தேர்தலில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டனி மகத்தான வெற்றிபெறும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

திருமாவளவன்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று வாக்களித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் பட்டு வாடா செய்துள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத் துள்ளது, இது முறையற்றது. பணம் பட்டு வாடா செய்த வேட்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. முறை கேடுகளில் ஈடுபட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிளிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது மக்களை களங்கபடுத்தும் செயல். மேலும், மக்களின் மீது ஊழல் கரையை பூசுகின் றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில், மத்திய சாலை போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி தேர்தலை நிறுத்தி வைத்திருப் பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயன்றும் பணப்புழக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே.வாசன்

சென்னை ஆழ்வார்பேட்டை பீம்மண்ண தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலுமே திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தனியாக தேர்தல் நடத்தி வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்பது சரியான முடிவாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணன் ஆதம் பாக்கம் புனித மாற்கு உயர் நிலைப் பள்ளியில் நேற்று வாக்களித்தார். நிருபர்களிடம் பேசிய அவர், “திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்துள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, அந்த தொகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x