Published : 30 Jun 2022 06:03 AM
Last Updated : 30 Jun 2022 06:03 AM
திருவண்ணாமலை: ஆரணி அருகே திமுக பிரமுகரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கமண்டல நாக நதியில் இருந்து கனிகிலுப்பை கிராம ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. இக்கால்வாய், எஸ்வி நகரம் (ஆரணி - செய்யாறு சாலை) வழியாக செல்கிறது. இந்நிலையில், அக்கிராமத்தில் உள்ள கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தகர ஷீட் கொட்டகை அமைத்துதிமுக பிரமுகர் கன்னியப்பன் கடை நடத்தி வந்துள்ளார். இதேபோல், தகர ஷீட் வீடு அமைத்து குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து, கால்வாய் புறம்போக்கு அருகே உள்ள காலி இடத்தின் உரிமையாளரான ஆரணி திருமலை நகரில் வசிக்கும் ஏழுமலை தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ல் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், வறுமையில் இருந்த குணசேகரனுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்திலேயே, திமுக பிரமுகர் கன்னியப்பன் மீண்டும் கொட்டகையை அமைத்துள்ளார். அந்த இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தையும் மாட்டி வைத்துள்ளார். ஆக்கிரமிப்பு குறித்து, கேள்வி எழுப்பிய ஏழுமலை உள்ளிட்டோர் மிரட்டப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப் பட்டது.
அதன்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர். அதில், கால்வாய் புறம்போக்கு இடத்தை கன்னியப்பன் ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற கோட்டாட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (30-ம் தேதி) நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT