Published : 11 May 2016 06:32 PM
Last Updated : 11 May 2016 06:32 PM

தேசிய நுழைவுத் தேர்வில் மாநில உரிமையை உறுதிப்படுத்த சட்டம் தேவை: முத்தரசன்

தேசிய நுழைவுத் தேர்வில் மாநில உரிமையை உறுதிப்படுத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தும் 'தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு' (National Eligibility cum Entrance Test -NEET) அடிப்படையில் மட்டுமே அமைத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் (09.05.2016) அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு, மத்திய அரசு தனது தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு முரணானது.

தமிழகத்தில் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை முறைப்படுத்தும் சட்டம் 2006ல் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நடைமுறையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளாது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை திணிப்பது, கல்வியில் மாநில அரசுகளுக்கு அரசியல் சட்ட ரீதியாக உள்ள உரிமையை பறிக்கிறது இது அரசியல் சட்;ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. .

2013 ல் 'நீட் நுழைவுத் தேர்வு' அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியே உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் அரசியல் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமல் மீண்டும் 'நீட்' தேர்வு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு திணிப்பது, படிப்படியாக மாநில அரசிகளின் உரிமைகளை பறிப்பது, கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு முழுமையாக மாற்ற முயல்வதாகும்.

2013 ல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு 'நீட்' தேர்வை திணித்த பொழுது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 'நீட்' தேர்வு மாநில உரிமைகளுக்கும், நலன்களுக்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. மாநிலங்களின் மீது திணிக்கப்படும் முயற்சி என்று கூறி கடுமையாக எதிர்த்தார். அவர் பிரதமரானதும் மாநில உரிமைகளுக்கு எதிரான 'நீட்' தேர்வை திணிப்பது பாஜகவின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிறது.

தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணவும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.இதில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கான (இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவம்) மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளுக்கு தற்போதுள்ள உரிமையை பாதுகாக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது'' என முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x