Published : 24 Jun 2022 04:56 AM
Last Updated : 24 Jun 2022 04:56 AM
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த், உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விலகி இருக்கிறார். இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவரது தம்பி சுதிஷ் ஆகியோர் கட்சிப் பணிகளை கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விஜயகாந்த் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி அனுமதிக்கப் பட்டார்.
இந்நிலையில், நீண்ட காலமாக நீரிழிவு பிரச்சினையால் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால் விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் பேசினார்
இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நலம் தொடர்பாக அவரது மனைவி பிரேமலதாவிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நலம் விசாரித்தார். அப்போது விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தவர், விரைவில் அவர் குணமடையவும் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஜயகாந்த் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘‘அன்புச் சகோதரர் விஜயகாந்த் உடல்நிலை மற்றும் சிகிச்சை முறை குறித்து சகோதரி பிரேமலதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT