Published : 23 Jun 2022 06:23 AM
Last Updated : 23 Jun 2022 06:23 AM

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: சென்னையில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்றது

ஆன்லைன் ரம்மி, சுரண்டல் லாட்டரி ஆகியவற்றை தடை செய்யக் கோரி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: ஆன்லைன் ரம்மி, சுரண்டல் லாட்டரி ஆகியவற்றை தடை செய்யக் கோரி, இந்திய ஜனநாயக கட்சிசார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வள்ளூவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்றைக்கு பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி ரம்மி விளையாடுகின்றனர். இறுதியில் கடன் வலையில் சிக்கி, தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதனால் அவர்களது குடும்பமும் பாதிப்படைகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

இதேபோல, அப்பாவி மக்களை பாதித்துவரும் சுரண்டல் லாட்டரியையும் தடை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

அவற்றின் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.ரவி பாபு, செய்தித் தொடர்பாளர் பிரவீன் காந்த், சென்னை மண்டல மகளிரணி தலைவர் லதா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x