Published : 21 Jun 2022 12:54 PM
Last Updated : 21 Jun 2022 12:54 PM

99% மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு வழிவிட்டு முன்மொழிந்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக வழிவிட்டு முன்மொழிந்து அனைவரது மனதிலும் இடம்பிடித்ததைப் போல, தற்போதும், தொண்டர்களின் விருப்பத்தை முன்மொழிந்து ஓ.பன்னீர்செல்வம் அனைவரது மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

கிரீன்வேல் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: " 50 ஆண்டு காலம் இந்த தாய்நாட்டிற்காக சேவை செய்திருக்கிற மாபெரும் மக்கள் இயக்கம் அதிமுக. கட்சியின் நிறுவனத்தலைவர் எம்ஜிஆர், எளிய எளியவர்களுக்காக, சாமானியர்களுக்காக திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த கட்சியை இந்தியாவில் மூன்றாவது மாபெரும் இயக்கமாக வளர்த்து உருவாக்கினார்.

அவரது மறைவுக்குப் பின்னர், இந்தக் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்தி, தொண்டர்களை பாரபட்சமின்றி, சாதி, சமய இன வேறுபாடின்றி அனைவரையும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாக பாரபட்சமின்றி சீர்தூக்கி பார்க்கின்றவர் எடப்பாடி பழனிசாமி. இன்று ஒட்டுமொத்தமாக கட்சியின் அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அவருடைய தலைமை அதிமுகவுக்கு வேண்டும் என்ற கருத்து வலிமையாக வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் கடந்த 4 ஆண்டுகால பரிந்துரைகள், செயல்பாடுகள், கட்சியின் மீது அவர் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக இருந்தாலும், பிரதான கொள்கை திமுகவின் மக்கள் விரோதப் போக்கினை,மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டியதுதான் அதிமுகவின் பிரதான லட்சியம். அதை மன உறுதியோடு, தொண்டர்களின் ஆதரவோடு, நிர்வாகிகளின் பேராதரவோடு நூறு சதவீதம் தொண்டர்கள் மனநிறைவோடு செயல்படுத்தி வருகிற தலைமையாக எடப்பாடி பழனிசாமி எங்கள் மனதில், முழுமையாக நிறைந்திருக்கிறார். அதிமுகவைப் பொருத்தவரை சாதி , மதம், இன பாகுபாடு இல்லாத சமதர்ம இயக்கம். எனவே அதன் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

99 சதவீதம் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் இருந்து அனைவருமே நேரடியாக வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவுக்கு முன்னரே, நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் குறித்து வெளியே சொன்னால், அந்த தீர்மானத்துக்கு மதிப்பும், மரியாதையும் இருக்காது.

தலைமையின் விருப்பு வெறுப்புகளை கேள்வி கேட்கவே முடியாது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு கொடுப்பது தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டது. அதனை கட்டாயப்படுத்த முடியாது.

ஓ.பன்னீர்செல்வம், பல சந்தர்ப்பங்களில், கட்சிக்காகவும், கட்சி தொண்டர்களுக்காகவும், கட்சியின் எதிர்காலத்திற்காகவும், ஒரு சாமானியராக கட்சியில் இணைந்து, கட்சியின் உச்சபட்ச பதவியில் அமரும் வகையில் அவர் உயர்ந்திருக்கிறார். எனவே கட்சிக்கு என்ன தேவை, தொண்டர்களின் விருப்பம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ன என்பதை எங்களைக் காட்டிலும் அவர் நன்றாக தெரிந்தவர். கள நிலவரம் அவருக்கு நன்றாக தெரியும்.

கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக, தொண்டர்களின் விருப்பத்தை இப்போது மூடி மறைக்கவே முடியாது. அரசியல் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான கருத்துகள். எனவே எப்படி முதல்வராக எடப்பாடி பழனிசாமியை வழிமொழிந்தாரோ, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக வழிமொழிந்தாரோ, அதேபோல, இப்போது தொண்டர்களின் விருப்பத்தை முன்மொழிந்து எல்லோரது மனதிலும் அவர் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x