Published : 19 Jun 2022 07:29 AM
Last Updated : 19 Jun 2022 07:29 AM
சென்னை: தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மேட்டூர் அணை, கல்லணை கால்வாய்ப் பகுதிகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தர் 2 நாட்களாக ஆய்வு செய்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஜூலை 23-ல் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்துவி வாதிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய பாஜக அரசு அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகாவுக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக அவர் செயல்படுவது தெரிகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில், காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைக்க, தமிழகத்தின் ஒப்புதலைபெற வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீரைத் தடுத்து மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடியில், 67.14 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையை கட்டினால், அதன்பிறகு தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது. எனவே, தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியிருப்பது, வரம்பு மீறிய செயல். முந்தைய ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கடுமையான ஆட்சேபமும், எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்ட பிறகும், ஆணையத் தலைவர் பிடிவாதமாக மேகேதாட்டு அணை பிரச்சினையை விவாதிக்க முனைவது, அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளதையும் கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் மேலாக தன்னை கருதிக்கொண்டு கருத்து தெரிவித்துள்ளார். அவரது வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: மேகேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்து சக்திகளும் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மத்திய நீர்வள அமைச்சரை சந்திப்பதால் மட்டுமே தமிழகத்துக்கு நீதி கிடைத்துவிடாது. உச்ச நீதிமன்றம் மூலமாக மட்டுமே தமிழகத்துக்கு நீதி கிடைக்கும். குறிப்பாக, காவிரி ஆணையக் கூட்டத்தில், தமிழகம் நமக்குரிய நீதியை வென்றாக வேண்டும்.
காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அதை சட்டப்படி தடுத்து நிறுத்துவது எளிதாக இருக்காது.
எனவே, மத்திய அமைச்சரை தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு சந்திக்க இருப்பது ஒருபுறம் நடைபெறும் சூழலில், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று கேரளா, புதுச்சேரி அரசுடன் இணைந்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT