Published : 08 May 2016 11:10 AM
Last Updated : 08 May 2016 11:10 AM

காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால், எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வழிவகுப்போம் என மதுரையில் நேற்று மாலை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை - நத்தம் சாலை மேனேந்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ராகுல் காந்திக்கும், எனக்கும் ஒரே சிந்தனைதான். திமுகவை பொறுத்தவரையில் தமிழகம் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும் என நினைக்கிறோம். காங்கிரஸை பொறுத்தவரையில் சகோதரத்துவம், மதச்சார்பின்மை கொள்கையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். திமுக, காங்கிரஸ் இணைந்து தமிழகத்துக்கு எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றன.

சேதுசமுத்திரத் திட்டம் தொடக்க விழா மதுரையில்தான் நடைபெற்றது. இந்த திட்டம் வந்திருந்தால் எண்ணற்ற தொழிற்சாலைகள் உருவாகி, லட்சக்கணக்கான இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்க முடியும். முதல்வராக இருந்த அண்ணா சட்டப்பேரவையில் பேசும்போது, சேதுசமுத்திரத் திட்டம், தூத்துக்குடி துறைமுகம் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சூயஸ் கால்வாய் போல இருக்கும் என தொலைநோக்குப் பார்வையுடன் சுட்டிக்காட்டினார்.

அண்ணாவின் கனவுக்கு முதன்முதலில் இசைவு கொடுத்தவர் வாஜ்பாய். இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் சோனியா காந்தி. வளர்ச்சியில் கட்சிப் பாகுபாட்டை இவர்கள் பார்த்ததில்லை. ஆனால், அரசியல் காழ்புணர்ச்சியால் சேதுசமுத்திர திட்டத்தை தடுத்தவர் ஜெயலலிதா.

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை தனது மாநிலத்துக்கு வர வேண்டாம் என தடுக்கிற ஒரு முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. 5 ஆண்டு களாக அனைத்து துறைகளும் முடங்கி, தமிழகம் இன்று இருட்டில் மூழ்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசியல் தலையீடு இன்றி காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கப்படும். லஞ்சம், ஊழல் எதுவும் இருக்காது என உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார்.

இந்திராவின் பேரனே வருக

ஸ்டாலின் மேலும் பேசும் போது, ‘‘ஒட்டிப் பிறந்த குழந்தை களைப் போல திமுக, காங்கிரஸ் கூட்டணியை பிரிப்பது கஷ்டம். இந்திராவை திமுக தலைவர் கருணாநிதி, அன்று நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். அதன் பிறகு சோனியா காந்தியை இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றார். நான் இப்போது ராகுல் காந்தியைப் பார்த்து சொல்கி றேன், இந்திராவின் பேரனே வருக, இந்தியாவின் இளம் தலைவரே வெல்க” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x