Last Updated : 20 May, 2016 01:19 PM

 

Published : 20 May 2016 01:19 PM
Last Updated : 20 May 2016 01:19 PM

ரங்கசாமி ஆட்சியை இழந்தது ஏன்?- மவுனமாக எதிர்ப்பை காட்டிய புதுச்சேரி மக்கள்

கட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த புதுச்சேரி ரங்கசாமிக்கு மீண்டும் ஆட்சியைத் தர பொதுமக்கள் மறுத்து மவுனமாக தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்தது என்.ஆர்.காங்கிரஸ். கடந்த 2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார் ரங்கசாமி.

உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. புதுச்சேரி வளர்ச்சியடையும், தொழில்கள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பிரச்சினைக்கும் எவ்வித தீர்வும் இல்லாத நிலைதான் உருவானது.

முதல்வர் ரங்கசாமி ஆட்சியமைத்தவுடன் மத்தியில் இருந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு வரவேண்டிய நிதியை நாராயணசாமி தடுப்பதாக குற்றம் சாட்டினார். இப்படியே 3 ஆண்டுகள் கழிந்தது. மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி வந்த பிறகும் ஏதும் நடக்கவில்லை. ஏடிஎம் இயந்திரத் தொழிற்சாலை, சாப்ட்வேர் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசு சார்பு நிறுவனங்களில் பலருக்கு மாத ஊதியம் தரப்படவில்லை. ரேஷனில் அரசிக்கு பதிலாக பணம் தரும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ரங்கசாமி அதை திரும்ப பெற்றார்.

மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு, குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் தொடர்புடையோர் கைது செய்யப்படாமல் உள்ள சம்பவம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பல பிரச்சினைகள் முக்கிய காரணமாக அமைந்தது.

உணவுப் பொருட்களின் விலை தமிழகத்தை விட கடுமையாக உயர்ந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக முன்பெல்லாம் விழுப்புரம், கடலூர் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பொருட்கள் வந்த காலமெல்லாம் உண்டு தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. மதிப்பு கூட்டு வரியான 'வாட் வரி' விதிப்பிற்கு பிறகு வந்த மாற்றம் இது என்றாலும் அது ரங்கசாமியின் ஆட்சியால் வந்த மாற்றம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவானது.

பல தனியார் பள்ளிகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தியும் அரசு கண்டுகொள்ளவே இல்லை. அரசு பள்ளிகளில் கட்டட வசதி மோசமாக இருந்தும் அரசு அதை சரிசெய்யவே இல்லை.

டெல்லி சென்று மத்திய அரசு தரப்பை சந்திக்கவும் இல்லை. நிதியை பெற நடவடிக்கை எடுக்கவும் இல்லை. மருத்துவம், பொறியியலில் ஒருங்கிணைந்த அரசு மாணவர் சேர்க்கை மூலம் தேர்வாகும் மாணவருக்கு அரசு நிதியுதவி தருகிறது. ஆனால், அதை விட பல மடங்கு கட்டணத்தை தனியார் மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கின்றன. அதையும் அரசு கொள்ளவில்லை. இதுபோல் பல பிரச்சினைகளால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையெல்லாம் உள்ளூரில் இருந்து உருவான அரசு தீர்க்கும் என காத்திருந்தனர் புதுச்சேரி மக்கள். ஆனால், பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை.

இலவச மிக்சி, கிரைண்டர் லேப்டாப் மட்டும் ஐந்தாண்டு ஆட்சியின் இறுதி கட்டத்தில் தந்தார் ரங்கசாமி. இந்த தேர்தல் அறிக்கையில் கூட, 'வீட்டுக்கு வீடு இலவச வாஷிங்மிஷின் தருவோம்' என்று குறிப்பிட்டார். ஆனால் அதை கண்டுகொள்ளவே இல்லை மக்கள்.

'நாலரை ஆண்டுகள் அமைதியாக எந்த சிக்கலையும் தீர்க்காமல் இருந்து விட்டு கடைசி நேரத்தில் இலவச பொருட்களை தருவதில் என்ன மாதிரியான சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும்?'

மக்களின் இந்த மன ஓட்டமே புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"புதுச்சேரியில் அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அரசு துறைகளில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதும் இக்கோபத்துக்கு முக்கியக் காரணம். வேலைவாய்ப்பு முக்கிய பிரச்சினையாகியுள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லைப்புறமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பிறகு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நீக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்ததாக பலரும் குறிப்பிடுகின்றனர்.'' இதெல்லாம் கூட தோல்விக்கான காரணங்களாக அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

"கடந்த மக்களவைத் தேர்தலின் போது திறக்கப்பட்ட நவீன மீன் அங்காடி நடைமுறைக்கே வரவில்லை. புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விமான நிலையம் மூடியே கிடக்கிறது. பல முக்கியத் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்றடையவில்லை. குறிப்பாக தமிழகத்தில் நடப்பது போல் திங்கள்கிழமை தோறும் குறைதீர் கூட்டத்தை அதிகாரிகள் இங்கு நடத்துவதே இல்லை. இதெல்லாம் கூட காரணங்கள்" என்கின்றனர் அரசு அலுவலர்கள்.

"தொண்டர்களுக்கு கட்சி அடையாள அட்டைக்கூட தரவில்லை. தொகுதி நிர்வாகிகள் கூட நியமிக்கப்படவில்லை. வேறு என்ன சொல்ல?" என்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.

இப்படியாக பலமுனை அதிருப்திகள் ஒன்று சேர்ந்து படர்ந்து செழித்து நிமிர்ந்து நிற்க வேண்டிய ஒரு உள்ளூர் அரசியல் கட்சியை அடியோடு சாய்த்திருக்கிறது.

'மத்திய அரசுடன் இனக்கமான ஒரு போக்கை கடைப்பிடித்து மாநில அரசுக்கான வளர்ச்சியை பெற வேண்டும்.' வளர்ச்சிக்கான இந்த இலக்கணம் மாநில அரசுக்கு பொருந்துமோ இல்லையோ மத்திய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருக்கிற யூனியன் பிரதேசத்துக்கு நிரம்பவே பொருந்தும்.

இந்த கூற்றை மெய்ப்பித்திருக்கிறார் ரங்கசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x