Published : 05 May 2016 04:17 PM
Last Updated : 05 May 2016 04:17 PM

ஜல்லிக்கட்டு: திமுகவும் அதிமுகவும் துரோகம் செய்ததாக ராமதாஸ் பட்டியல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாமல் போனதற்கு தங்களுக்கு சம்பந்தமே இல்லாதது போல் திமுக, அதிமுக நடந்து கொள்வது மக்களை ஏமாற்றும் செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்த முடியாமல் போனதற்கு யார் காரணம் என்பது குறித்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் இருவருமே குற்றவாளிகள் எனும் போது, இதில் தங்களுக்கு சம்பந்தமே இல்லை என்பது போல இருவரும் நடந்து கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விஷயத்தில் இரு திராவிடக் கட்சிகளும் செய்த துரோகத்தை இந்த தேதிக்கு முன், இந்த தேதிக்கு பின் என இரு கட்டங்களாக பிரிக்கலாம். இந்த தேதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிப்பதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. விலங்குகள் நல வாரியமும், விலங்குகளின் நலனுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும் கிட்டத்தட்ட 2004-ம் ஆண்டிலிருந்தே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை பெறுவதற்காக சட்ட நடவடிக்கைகளில் இறங்கின.

அதன்பயனாக 2007-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தடையை தற்காலிகமாக நீக்கி தான் 2008 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை ஏற்படாமல் இருப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காப்பாற்றி விட்டதாக கருணாநிதி தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார். ஆனால், அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறி விட்டார். அதனால், ஜல்லிக்கட்டை காக்கும் அளவுக்கு அச்சட்டம் வலிமையானதாக இல்லை.

அதுமட்டுமின்றி, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அத்துறையிலிருந்து மாற்றப்படுவதற்கு முதல் நாள் அதாவது 11.07.2011 அன்று காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டார். அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுத்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எந்த தடையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால், கருணாநிதி ஜல்லிக்கட்டுக்கு எதிரான இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாக இருந்தார். இந்த அறிவிக்கை தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்க முக்கியக் காரணமாக இருந்தது. ஒருவேளை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால் அந்த சட்டம் செல்லும் என்று கூறி ஜல்லிக்கட்டு போட்டியை உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கும். இதை செய்யாமல் ஜல்லிக்கட்டுக்கு 2 வகைகளில் துரோகம் செய்தவர் கருணாநிதி.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஜெயலலிதா செய்த துரோகம் இன்னும் பெரியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் 07.05.2014 அன்று தடை விதித்தது. அத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 19.05.2014 அன்றே தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஜனவரி மாதம் வரை 20 மாதங்களாகியும் அம்மனுவை விரைவாக விசாரித்து, தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிடவில்லை.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஆதரவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்திருந்தால் கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியிருக்க முடியும். ஆனால், ஜெயலலிதா ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை மீண்டும் சேர்த்து சட்டம் கொண்டு வந்தால் கூட ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியிருக்கலாம். மாநிலங்களவையில் ஜெயலலிதா ஆதரவு மத்திய அரசுக்கு அவசியம் என்பதால் ஜெயலலிதா அழுத்தம் கொடுத்திருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சாத்தியமாகியிருந்திருக்கும். ஆனால், ஊழல் வழக்கில் தப்ப மத்திய அரசிடம் உதவி கேட்ட ஜெயலலிதா, ஜல்லிக்கட்டுக்காக அழுத்தம் கொடுக்கவில்லை.

இவ்வாறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எதிராக போட்டிப்போட்டுக் கொண்டு துரோகம் செய்த அதிமுகவும், திமுகவும் இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி பெற்றுத் தரப்போவதாக கூறுவதை விட சிறந்த நகைச்சுவை எதுவும் இருக்க முடியாது. அதுவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இவ்வாறு கூறுவதன் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக உண்மையாக போராடும் மக்களையும், அமைப்புகளையும் கருணாநிதி கேலி செய்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதன் மூலமாகவோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெறுவதன் மூலமாகவோ மட்டும் தான் இது சாத்தியம். ஆனால், இத்தகைய முயற்சிகளை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிக்கையை பிறப்பித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், அதற்கு அனுமதி அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பரம எதிரிகள்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் செகந்திராபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயசிங்குக்கு கடந்த ஆண்டு திசம்பர் 15 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், ஜல்லிக்கட்டு கொடூரமான பொழுதுபோக்கு என்றும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் மன்மோகன்சிங் கூறியிருந்தார். ஜெய்ராம் ரமேஷ் இன்னும் ஒருபடி மேலே போய் ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்று கூறி தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்தார்.

தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் இந்த கருத்துக்களை கண்டிக்கக்கூட முன்வராத கருணாநிதி, இப்போது அதே காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தப்போவதாக கூறுவதையும், ஜல்லிக்கட்டுக்காக துரும்பைக்கூட அசைக்காத ஜெயலலிதா, தமது அரசால் தான் ஜல்லிக்கட்டு சாத்தியம் என்று கூறுவதையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

அடுக்கடுக்காக துரோகங்களை செய்து விட்டு ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக செயல்படுவது போல நடித்து தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஈடுபடாமல் இருப்பதே நல்லது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x