Published : 14 Jun 2022 06:37 AM
Last Updated : 14 Jun 2022 06:37 AM

தென்காசி - நெல்லை இடையே ‘ஒன் டூ ஒன்’ பேருந்துகளுக்கு முக்கியத்துவம்: சாதாரண பேருந்துகள் வருகைக்காக கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்

தென்காசி: தென்காசி - திருநெல்வேலி இடையே ஒன் டூ ஒன் பேருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், சாதாரண பேருந்துகளுக்காக கால் கடுக்க மக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்விநிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் பேருந்தில்திருநெல்வேலிக்கு சென்று வருகின்றனர். மருத்துவ வசதி, தொழில் நிமித்தம் போன்றவற்றுக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திருநெல்வேலி சென்று வருகின்றனர்.

தென்காசி- திருநெல்வேலி இடையே ஏராளமான ஒன் டூ ஒன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எளிதில் திருநெல்வேலிக்கு செல்ல முடிகிறது. ஆனால் தென்காசி- திருநெல்வேலி இடையே ஆலங்குளம் வழியாக சாதாரண பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன.

இதனால், பாவூர்சத்திரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், அத்தியூத்து, ஆலங்குளம், கரும்புளியூத்து, மாறாந்தை, சீதபற்பநல்லூர் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் பேருந்துக்காக கால் கடுக்க காத்திருக்கின்றனர். குறித்த நேரத்தில் செல்ல முடியாமலும், கூட்ட நெரிசலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு 2 அல்லது 3 ஒன் டூ ஒன் பேருந்துகள் புறப்பட்டு சென்ற பின்னர்தான் திருநெல்வேலிக்கு சாதாரண பேருந்து இயக்கப்படுகிறது. போதிய சாதாரண பேருந்துகள் இயக்கப்படாததால் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்துகளிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைதிருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து முழுவதும் நிரம்பி, இடம் கிடைக்காமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு தீர்வு காண சாதாரண பேருந்துகளை கூடுதலாக இயக்கவேண்டும். தென்காசி- ஆலங்குளம் மற்றும் ஆலங்குளம்- திருநெல்வேலி இடையே பேருந்துகள் இயக்கினால் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். இதற்கு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x