Published : 11 Jun 2022 07:59 AM
Last Updated : 11 Jun 2022 07:59 AM
ஆவடி: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஆவடியில் 3 நாள் உணவுத் திருவிழா நடக்கிறது. இதனை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், நேற்று ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் 'உணவுத் திருவிழா 2022' நேற்று தொடங்கியது. நாளை (12-ம் தேதி) வரை நடைபெற உள்ள இந்த விழாவை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து, உணவு வகைகளை உண்டார்.
திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகளை அறியும் வகையில்நடக்கும் இந்த உணவுத் திருவிழாவில், பிரபலமான உணவு விடுதிகள், இனிப்பகங்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்புநிறுவனங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.
அந்த அரங்குகளில், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறி வகைகள், சிறுதானிய உணவுவகைகள், மக்காச் சோளத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், பிரியாணி வகைகள், சோழ மண்டல உணவு வகைகள், வடமாநில உணவு வகைகள் என ஏராளமான உணவு வகைகள் நிரம்பி வழிந்தன. அவைகளை பொதுமக்கள் திரளானோர் ரசித்து ருசித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
இத்திருவிழாவில் நேற்று தப்பாட்ட கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், நட்சத்திர பட்டிமன்றம் மன்றம் சுவையான சமையல் போட்டிகள் மற்றும் உடல் நலம் காக்கும் உணவு வகைகள் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
உணவுத் திருவிழாவின் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், திருவள்ளுர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) மகாபாரதி, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT