Published : 11 Jun 2022 06:52 AM
Last Updated : 11 Jun 2022 06:52 AM
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை ராஜேந்திரம் ஊராட்சியில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியிருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கு வாசகர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரத்தைச் சேர்ந்த பூபதி கூறியது:ராஜேந்திரம் ஊராட்சி 3-வது வார்டில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் செல்லும் கால்வாய், முடியும் இடத்தில் செடிகள் வளர்ந்து, புதர்மண்டியதால் தடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கழிவுநீர் முறையாக வடியாமல் தேங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதேநிலைதான் உள்ளது.
இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று பரவும் நிலையில், மழைக் காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளைச் சூழ்ந்துவிடுகிறது. மேலும், அருகிலுள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும்போது, இந்தக் கால்வாய் வழியாக கழிவுநீருடன் தெருவுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த கழிவுநீர் கால்வாயைச் சீரமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே, கழிவுநீர் தேங்காமல் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “அங்கு சாக்கடை கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயின் எதிர்ப்பகுதியில் விவசாயம் செய்யப்படுவதால், சாக்கடை கட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயும் ஒரு காலத்தில் பாசன வாய்க்காலாக இருந்தது. இதுபோல, இதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT