Published : 28 May 2016 10:35 AM
Last Updated : 28 May 2016 10:35 AM

ஆவடியில் உள்ளது போல் தமிழகத்தில் மேலும் ஒரு போர் ஊர்தி தொழிற்சாலை அமைக்க பரிசீலனை: ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் தகவல்

ஆவடியில் உள்ளது போல் தமிழகத்தில் மேலும் ஒரு போர் ஊர்தி தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு 3-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடுவதற்காக ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் நேற்று சென்னை வந்தார். சென்னை தி.நகரில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு நிருபர்களிடம் மனோகர் பரிக்கர் கூறியதாவது:

இதற்கு முன்பு ஒரு அரசு வெற்றி பெற்றால், 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்களை சந்திப்பார்கள். ஆனால், நாங்கள் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், எங்கள் அரசின் சாதனை சொல்ல முன் வந்துள்ளோம். மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து சொல்வதற்காக பாஜக சார்பில் 500 பேர் நாடு முழுவதும் பயணித்து வருகிறார்கள்.

வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம், ஏழைகள் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக கொண்டுதான் எங்கள் அரசு இயங்கி வருகிறது. பிரதமரின் ஜன் தன் யோஜனா அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 21.7 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.37 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கேஸ் மானியம், மாணவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை என 59 திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. வறட்சியை முன் கூட்டியே தடுப்பதற்கு, வறட்சி நிவாரண நிதியாகவும் நாங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம்.

நிலக்கரி, இரும்பு சுரங்கம், ஸ்பெக்ட்ரம் அனைத்தின் மூலம் லாபம் கிடைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தென்னிந்தியாவில் மின் தடை இல்லை. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பயனடைந்துள்ளனர். ஆவடி கனரக தொழிற்சாலையில் 13 ரேடியட்டர்கள் இயங்காமல் இருந்தது, அதனை எனது நேரடி பார்வையில் சரி செய்ததால், அதன் உற்பத்தி 17.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆவடியில் போலவே, தமிழகத்தில் வேறு இடத்திலும் கன ரக போர் ஊர்தி தொழிற்சாலை அமைக்க பரிசீலித்து வருகிறோம். போபர்ஸ் ஊழலின் காரணத்தால் கடந்த 33 ஆண்டுகளாக, பழைய துப்பாகிகளைத்தான் ராணுவம் பயன்படுத்தியது, தற்போது அதுமாற்றப்பட்டு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்தும் வண்ணம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகளை ஒருபோதும் மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது.



தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய கடலோர காவல்படைக்கு அறிவுறுத்தியுள்ளோம். இலங்கை மந்திரிகளுடனும் இதுபற்றி பேசி வருகிறோம். இதனால், கடந்த காலங்களில் போல் இல்லாமல், மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்துள்ளது.

இவ்வாறு மனோகர் பரிக்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x