Published : 09 Jun 2022 07:48 AM
Last Updated : 09 Jun 2022 07:48 AM

பெங்களூரு முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க கர்நாடக அரசு ஒப்புதல்: கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி தகவல்

கிருஷ்ணகிரி: பெங்களூரு முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., டாக்டர் செல்லக்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக ஓசூர், தளி, சூளகிரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலை, தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று வரும் சூழ்நிலை உள்ளதால், இக்கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பலமுறை மக்களவையில் வலியுறுத்தி உள்ளேன். மேலும் கர்நாடக அரசிடம் வலியுறுத்தியபோது இத்திட்டத்தை நீட்டிக்க முடியாது என முதலில் மறுத்துவிட்டனர். தொடர்ந்து, பெங்களூரு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தலைமை அலுவலர்களை சந்தித்து, இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி புனேவில் நடந்த அனைத்து மெட்ரோ ரயில் திட்ட தலைமை அலுவலர்கள் கூட்டத்திலும், வலியுறுத்தப்பட்டது. அப்போது, கர்நாடக அரசு அலுவலர்கள் பரிசீலிப்பதாக தெரி வித்தனர்.

கடந்த மார்ச் 21-ம் தேதி கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சீத்தராமையா ஆகியோரிடம், இத்திட்டம் நிறைவேற்றினால், 2 மாநிலங்களும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் அடையலாம் என விளக்கமாக கூறப்பட்டது. இதன் பயனாக கடந்த மே 23-ம் தேதி கர்நாடக மாநில அரசு சார்பில், இத்திட்டத்தை பெங்களூரு முதல் ஓசூர் வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

எனவே விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இத்திட்டம் குறித்து எடுத் துரைக்க உள்ளேன். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கனவு திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்ட கர்நாடக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், ஒப்புதல் தரஉள்ள தமிழக முதல்வருக்கும்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட முன்னாள் தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், ஜேசுதுரை, சிறுபான்மைப் பிரிவு ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், வழக்கறிஞர் அசோகன், முன்னாள் நகர தலைவர் முபாரக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x