Published : 08 Jun 2022 07:33 AM
Last Updated : 08 Jun 2022 07:33 AM

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழித்தால் ஞானம் பிறக்காது: அண்ணாமலை

பெரம்பலூர்: மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று பாஜக தமிழக தலைவர் கு.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக தமிழக தலைவர் கு.அண்ணாமலை, ‘விருட்சமாகும் விதைகளுக்கு’ என்ற தலைப்பில் பேசியது:

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து உயர் பொறுப்புகளை அடைய வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். சாதனை மனிதர்களாக உருவாக வேண்டும். செல்போன்களை வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் மூழ்கி நேரத்தை விரயம் செய்யக்கூடாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனில், சமூக வலைதளங்களில் தினமும் 10 நிமிடங்களுக்கு மேல் செலவழிக்கக்கூடாது. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழித்தால் ஞானம் பிறக்காது. மாறாக, முன்னேற்றம்தான் தடைபடும்.

அரசியலில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்றவர்கள் வேறு வழியின்றி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களுக்கு அப்படி ஒரு நெருக்கடி, தேவை இல்லாததால், சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவழிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x