Published : 06 Jun 2022 06:04 AM
Last Updated : 06 Jun 2022 06:04 AM
வேலூர்: வேலூரில் நேற்று மாலை இடியுடன் கூடிய திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்தது. வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயிலுக்கு பிறகு அதிகபட்சமாக 106 டிகிரி வரை கொளுத்தியது. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பாக 93 டிகிரியாக இருந்த வெயில் வேலூரில் படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த மே மாதம் 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது.
கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியதால் கத்திரி வெயில் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. கத்திரி வெயில் காலத்தில் வெயில் தாக்கம் வேலூர் மாவட்டத்தில் 95 டிகிரி முதல் 98 டிகிரி என 100 டிகிரிக்குள்ளாகவே பதிவானதால் மக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்தனர்.
ஏமாற்றமே மிச்சம்
இந்நிலையில், மே 28-ம் தேதி கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வெயில் தாக்கம் குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மே 29-ம் தேதி 102.6 டிகிரி கொளுத்திய வெயில் மக்களை அச்சுறுத்தியது.
அதனைத்தொடர்ந்து, மே 30-ம் தேதி 102 டிகிரியும், 31-ம் தேதி 101 டிகிரி என வெயில் தொடர்ந்து சதம் அடிக்கத்தொடங்கியது. பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலைக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்கள் தவித்து வந்தனர். திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், வேலூர் மாவட்டத்தில் கோடை மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போனது.
கத்திரி முடிந்தும் வெயில்
ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் வேலூர் வெயில் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஜூன் 1-ம் தேதி 102.6 டிகிரியாக பதிவான வெயில் அளவு படிப்படியாக அதிகரித்து, ஜூன் 4-ம் தேதி 106 டிகிரியாக பதிவாகின. கத்திரி வெயில் முடிந்தும் 106 டிகிரி கொளுத்தியதால் வேலூர் மக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலையும் வெயில் வழக்கம் போல் கொளுத்தியது. நேற்று 106.3 டிகிரியாக வெயில் அளவு பதிவானது. வெயில் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பேரணாம்பட்டு பகுதியில் பலத்த காற்று வீசியதால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
காலையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் சில இடங்களில் பெய்த மழை வேலூர் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT