Last Updated : 05 Jun, 2022 11:34 AM

 

Published : 05 Jun 2022 11:34 AM
Last Updated : 05 Jun 2022 11:34 AM

கோவை | காவலரால் தாக்கப்பட்ட விவகாரம்: உணவு விநியோக நிறுவன ஊழியரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு

கோவை: கோவை பீளமேடு அருகே, காவலரால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உணவு விநியோக நிறுவன ஊழியரை தொடர்புகொண்டு டிஜிபி சைலேந்திரபாபு நலம் விசாரித்தார்.

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(38). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர், தனியார் (ஸ்விகி) உணவக விநியோக நிறுவனத்தில் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை (ஜூன் 4-ம் தேதி), மோகனசுந்தரம் ஹோப்காலேஜ் பகுதி உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, புலியகுளம் சாலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பீளமேடு காவல் நிலையம் அருகே வந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த, தனியார் பள்ளி வேன், அவிநாசி சாலையிலிருந்து பன்மால் சாலையை நோக்கி திரும்பியது. அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது.

இதைப் பார்த்த மோகனசுந்தரம் பள்ளி வேன் ஓட்டுநரிடம் ஏன் அலட்சியமாக வேனை ஓட்டுகிறீர்கள் என தடுத்து நிறுத்தி கேட்டுள்ளார். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது. பன்மால் சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ், என்ன சம்பவம் என விசாரிக்காமல், சம்பவ இடத்துக்கு வந்து, இதை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம். நீ யார் ? எனக்கேட்டு உணவக விநியோக ஊழியர் மோகனசுந்தரத்தின் செல்போனை பிடுங்கி அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள், இதை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டார்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக மோகனசுந்தரம், பீளமேடு போலீஸில் புகார் அளித்ததன்பேரில் காவலர் சதீஷ் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் காவலர் சதீஷை பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.

டிஜிபி ஆறுதல் : இந்நிலையில், காவலரால் தாக்கப்பட்ட ஊழியர் மோகனசுந்தரத்தை செல்போனில் தொடர்புகொண்டு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நலம் விசாரித்தார். மேலும் , காவலர் சதீஷ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவரிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழிநாடு காவல்துறை வெளியிடப்பட்ட பதிவில்,"கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , ஸ்விகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன்,"என டிஜிபி சைலேந்திரபாபு பெயரிடப்பட்டு கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x