Published : 05 Jun 2022 07:17 AM
Last Updated : 05 Jun 2022 07:17 AM
மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். தொடர்ந்து, தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தருமபுரம் ஆதீனம் கூறியது: வரும் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவளவிழா நிறைவு விழாவுக்கு முதல்வரை அழைத்து வர அறநிலையத் துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். மரபுவழியைப் பின்பற்றும் ஆதீனங்களுடன் தமிழக அரசு இணக்கமாக செயல்படுகிறது என்றார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவளவிழாவில் முதல்வர் பங்கேற்பது குறித்த ஆதீனத்தின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட 27 கோயில்களில், திமுக ஆட்சியில் 18 கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையே தமிழக அரசு அமல்படுத்தியது. அக்கோயிலில் புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அறநிலையத் துறை சார்பில் கடிதம் அனுப்பி உள்ளோம். அந்தக் கோயிலை அறநிலையத் துறை ஏற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.
பொதுக் கோயில்களில் புகார்கள் வந்தால், அதை விசாரிக்க அறநிலையத் துறைக்கு உரிமை உண்டு. சட்டத்துக்குப் புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால்தான் அந்தக் கோயில்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என்றார்.
முன்னதாக, கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம் வரவேற்றார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், நகராட்சித் தலைவர் என்.செல்வராஜ், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் சி.மணி, பாடசாலை நிர்வாகச் செயலர் குரு.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT