Last Updated : 01 May, 2016 02:52 PM

 

Published : 01 May 2016 02:52 PM
Last Updated : 01 May 2016 02:52 PM

மாற்றத்துக்கு இனி வாய்ப்பில்லை: தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்கள் உற்சாகம்

வேட்பாளர் மாற்றத்துக்கு இனி வாய்ப்பில்லாததால் அதிமுக வேட்பாளர்கள் உற்சாகமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளில் அதிமுகவும், திருச்செந்தூர் தொகுதியில் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன. திருச்செந்தூர் தொகுதியில் சமக தலைவர் ஆர். சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருவர் மாற்றம்

அதேநேரத்தில் அதிமுக போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மந்தமாகவே இருந்தது. வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என்ற பயமே இதற்கு காரணம். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக முதலில் புவனேஸ்வரன் என்பவரை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் தேர்தல் அலுவலகங்களைத் திறந்து பணிகளை தொடங்கிய நிலையில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் கோவில்பட்டி தொகுதியில் முதலில் ராமானுஜம் கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, கடம்பூர் செ. ராஜூ அறிவிக்கப்பட்டார்.

மாற்ற வாய்ப்பில்லை

இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வேட்பாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு சென்றனர். வேட்புமனு பரிசீலனையில் அனைத்து தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்களாக மனு செய்தவர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தற்போது 6 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். எனவே, இனிமேல் வேட்பாளர்களை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இதையடுத்து அதிமுக வேட்பாளர்கள் உற்சாகமடைந்து தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

அச்சம் உண்மைதான்

‘வேட்பாளர் மாற்றம் குறித்த அச்சம் இருந்தது உண்மைதான். ஆனாலும் தேர்தல் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருந்தோம். பிரச்சாரம் செய்ய இன்னும் 14 நாட்கள் உள்ளன. இந்த 14 நாட்களும் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட வாய்ப்பிருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் ஓய்வின்றி உழைப்போம்’ என்று அதிமுக வேட்பாளர்கள் தரப்பினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x