Last Updated : 04 Jun, 2022 03:26 PM

 

Published : 04 Jun 2022 03:26 PM
Last Updated : 04 Jun 2022 03:26 PM

திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

திருச்செங்கோடு அரத்தநாரீஸ்வர் மலைக்கோயிலில் வைகாசி விசாகத் தேர்திருவிழாவையொட்டி கோயிலில் கொடியேற்றப்பட்டது.

நாமக்கல்: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசியில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இத்திருவிழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தாண்டுக்கான வைகாசி விசாகத் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர்

இதன்படி கோயில் வளாகத்தில் உள்ள செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அர்த்நாரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வரும் 7ம் தேதி 4ம் திருவிழா நடக்க உள்ளது. அன்று உற்சவர் திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 12ம் தேதி 9ம் திருவிழாவாக திருக்கல்யாணம், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம், விநாயகர் முருகன் தேர்கள் வடம் பிடித்தலும், தொடர்ந்து 13, 14, 15 ஆகிய நாட்களில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜூன் 15ம் தேதி மாலை பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. 17ம் 14ம் திருவிழாவாக அர்த்தநாரீஸ்வர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருள உள்ளார். விழாவை ஒட்டி கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், வழக்காடு மன்றங்கள் நடைபெறும். சேலம், நாமக்கல், ஈரோடு என தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொள்வர். இதையொட்டி நகரில் காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்ய உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x