Published : 04 Jun 2022 01:46 PM
Last Updated : 04 Jun 2022 01:46 PM

அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் மே 27-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 15,708 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், ஜூன் 3 ஆம் தேதி வரை 21,055 பேருக்கு கரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனா தொற்று உறுதியாகும் சதவீதம் 0.52%-ல் இருந்து 0.73% ஆக அதிகரித்துள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மீண்டும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "பரிசோதனைகளை அதிகரித்தல், கூட்டுத் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து கட்டுப்படுத்துதல், மரபணு மாறிய புதிய கரோனா வகை பரவுகிறதா என கண்டறிய மரபணு பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் தகுதியானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தாலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x