Published : 02 Jun 2022 06:07 AM
Last Updated : 02 Jun 2022 06:07 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தொடங்கி நடத்தி வந்த ‘அம்மா இல்லம்’ அலுவ லகம் நிலப்பிரச்சினை தொடர்பாக இரவோடு இரவாக இடித்து அகற்றி யதால் சலசலப்பு ஏற்பட்டது.
தி.மலையில் அண்ணா நுழைவு வாயில் அருகில் அதிமுக தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் ‘அம்மா இல்லம்’ என்ற பெயரில் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அங்கு மாவட்ட அதிமுக அலுவலகத்துடன் இளை ஞர்களுக்கான கணினி பயிற்சி, தையல் பயிற்சி அளிப்பதுடன் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உணவு அருந்தும் கூடம் அமைத்தார்.
சுமார் 4 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் அந்த இடத்தில் தற்காலிக கூடம் அமைத்து அம்மா இல்லத்தை பெருமாள் நகர் கே.ராஜன் நடத்தி வந்தார். அந்த இடத்துக்கான வாடகையை அவர் முறைப்படி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் ‘அம்மா இல்லம்’ இருந்த இடத்தையும் அதன் அருகில் இருந்த மேலும், 4 ஆயிரம் சதுரடி இடத்துடன் சேர்த்து மொத்தம் 8 ஆயிரம் சதுரடி இடத்தை அதிமுக பிரமுகர் சஞ்சீவி என்பவருக்கு விற்றுள்ளார்.
இதையடுத்து, அந்த இடத்தை காலி செய்யும்படி பெருமாள் நகர் கே.ராஜனிடம் அதிமுக பிரமுகர் சஞ்சீவி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இடத்தை காலி செய்யாமல் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் நகர் கே.ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கியதால் திருவண்ணாமலை நகரின் வேறு பகுதியில் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ‘அம்மா இல்லம்’ செயல்படாமல் முடங்கி இருந்துள்ளது.
இந்நிலையில், அம்மா இல்லம் இருந்த இடத்தை அதன் உரிமையாளர் தரப்பினர் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றியதாக தெரிகிறது. இந்த தகவல் நேற்று காலை பரவியதால் அதிமுக தொண்டர்களும் பெருமாள் நகர் கே.ராஜனின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர்.தற்போது, பெருமாள் நகர் கே.ராஜன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பொக் லைன் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அடுத்த அங்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். இடப்பிரச்சினை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருவண்ணாமலையில் ‘அம்மா இல்லம்’ என்ற பெயரில் இயங்கிய அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT