Published : 31 May 2022 07:09 AM
Last Updated : 31 May 2022 07:09 AM

உத்தராகண்ட்டில் ஏற்பட்ட விபத்தில் ‘தி இந்து’ செய்தியாளர் கார்த்திக் மாதவன் உயிரிழப்பு

கோவை: உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் கோவை ‘தி இந்து’ சிறப்பு செய்தியாளர் கார்த்திக் மாதவன் (41) உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியில் உள்ள தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மாதவன். திருமணமான இவர், அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் கோவை பதிப்பு சிறப்புச் செய்தியாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு செய்தியாளராக ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆன்மிக சுற்றுலா தலங்களை பார்வையிடுதல், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வமுள்ள இவர் அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உத்தராகண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். உத்தரகாசி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 13 பேருடன் சுற்றுலா வேனில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் மாதவன் உயிரிழந்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

கார்த்திக் மாதவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x