Published : 10 May 2016 02:39 PM
Last Updated : 10 May 2016 02:39 PM

கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல் ஒழியும்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி வேட்பாளர் எம்.சின்னதுரைக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

கடந்த திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நடத்தாமலேயே, மாணவர்கள் படித்ததாகக் கூறி, அரசிடமிருந்து உதவித்தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.

அதேபோல, அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகளில் பயன்படுத்துவதற்காக நீராவி கொதிகலன் வாங்குவதில் பெரிய அளவில் மோசடி செய்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன்.

அதிமுக ஆட்சியில் ஆற்று மணலிலேயே பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இனி தாது மணல் தொழிலையும் அரசே நடத்தும் என அறிவித்திருப்பதன் மூலம், அதிலும் கொள்ளையடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

இதுபோல, தமிழகத்தில் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாகச் செயல்படும் திமுக, அதிமுக கட்சிகள், எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இணைந்து செயல்படுகின்றன.

கடந்த 10 மாதங்களாக மக்கள் நலக் கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவுதான், தற்போது பல்வேறு கட்சிகள் மதுவிலக்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன.

தற்போது மதுவிலக்கு குறித்து பேசும் திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கட்சியினர் நடத்திவரும் மதுபான ஆலைகளை மூடிவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால், அவர்களது வாக்குறுதியை மக்கள் நம்புவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x