Published : 27 May 2022 06:24 AM
Last Updated : 27 May 2022 06:24 AM

சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தமிழக காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் திமுக 3 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடுகின்றன. ஒரு இடத்தை காங்கிரஸுக்கு திமுக வழங்கியுள்ளது. அந்த ஒரு இடத்தை பெற தமிழக காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக காங்கிரஸில் பல தலைவர்கள் உள்ள நிலையில், அவர்கள் மூலமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நெருங்க பலர் முயன்று வந்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி ஆகியோரின் பெயர்களே பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

ப.சிதம்பரம் பலமுறை எம்.பி.யாக இருந்தவர். அவரது மகனும் எம்.பி.யாக உள்ளார். இதனால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமையிடம் இருந்து வரும் வேட்பாளர் அறிவிப்புக்காக கட்சியினர் காத்திருக்கின்றனர்.

இதுவரை அறிவிப்பு வராத நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசியதாக கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவர் தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டுதான் சென்றதாக மாற்று கோஷ்டியினர் கூறிவருகின்றனர். ஜூன் 10-ம் தேதி தொடங்கும் உட்கட்சி தேர்தல், ஆகஸ்டில் நடக்க உள்ள மாநிலத் தலைவர் தேர்தல் ஆகியவை குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x