Published : 25 May 2022 06:50 AM
Last Updated : 25 May 2022 06:50 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: மேதா பட்கர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு கனிமொழி எம்.பி., சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், தொல் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் நீதி கிடைக்கவில்லை” என, சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.

சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் சூழியல் பாதுகாவலர் கோ.சுந்தர்ராஜன் பங்கேற்றனர்.

முன்னதாக மேதா பட்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் 100 நாட்கள் அமைதியான முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது காவல் துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தெரிவித்துள்ளது. சிபிஐ நடுநிலையான, நேர்மையான அமைப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சிபிஐ குற்றப்பத்திரிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால், நீதி இன்னும் கிடைக்கவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட 4 பேருக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் மீண்டும் செயல்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்பட்டால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றார்.

உடன்குடி அனல்மின் நிலையம்

நேற்று காலையில் மேதா பட்கர், சுப உதயகுமாரன் ஆகியோர் உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பகுதியை பார்வையிட்டனர்.

அப்போது மேதா பட்கர் கூறும்போது, “உடன்குடி அனல்மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படும். காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இச்சூழலில் உடன்குடியில் அனல்மின் நிலையம் அவசியமற்றது. நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றில் திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை போன்றே, உடன்குடி அனல்மின் திட்டத்திலும் எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x