Published : 24 May 2022 12:22 PM
Last Updated : 24 May 2022 12:22 PM

“பேசினால், எழுதினால் குண்டர் சட்டம் பாய்வது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்?” - சீமான்

சென்னை: "பேசினால், எழுதினால், குண்டர் சட்டம் என்றால், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மே 26-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் வருகை குறித்த கேட்டப்போது, "ஏற்கெனவே தொடங்கிய திட்டங்கள் எல்லாம் தமிழகத்துக்கு நன்மை தந்திருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டுமே ஒவ்வொரு தடவையும் தொடங்குகிறீர்கள். ஒரு செங்கல் ஒன்று இருந்தது. அதையும் ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் எத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் நிறைவேறியுள்ளதா, நன்மை தந்துள்ளதா? ஏதாவது அறிவிப்பு வெளியிடப்படும். அதை கட்டுவோம், இதை கட்டுவோம், இதை செய்துவிடுவோம் என்று, காதுகளில் இந்த செய்தி வரும்போது இனிக்கும் அவ்வளவுதான்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "பட்டப்பகலில் சாலைகளில் வைத்து வெட்டிக் கொலை செய்யும் வகையில்தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு உள்ளது. என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது? பேசுவதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்து, புனைந்து, சிறைபடுத்துவதெல்லாம் அதிகார அத்துமீறல்.

ஒருவர் ஒரு கருத்தை பதிவிடுகிறார் என்றால், அதற்கு மாற்று கருத்தைத்தான் பதிவிட வேண்டுமே தவிர, உடனடியாக சிறைபடுத்தி, பேசுவதெற்கெல்லாம் குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. பேசினால், எழுதினால், குண்டர் சட்டம் என்றால், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்?

பத்திரிகைகளில் எழுதுவது அரசின் நற்பெயரை கெடுப்பதாக கூறுகிறார்கள். அரசு செய்யும் செயலில் கெடாதது, செய்தியாக வரும்போது கெட்டுவிடுமா? செய்தி வராமல் செயலை மாற்றிக் கொண்டால், செய்தி வராது. அதிகாரத்தில் இருக்கும்போது, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அதிகாரம், ஆட்சியாளர்கள் என்று பேசுவதை எப்படி மக்கள் ஆட்சி என எடுத்துக்கொள்வது, எப்படி ஜனநாயகம் என்று எடுத்துக்கொள்வது. ஒரே ஒரு கருத்து, அதை யாரும் எதிர்க்கக்கூடாது என்று கூறுவது ஜனநாயகமா, கொடுங்கோன்மையா?” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x