Published : 24 May 2022 11:49 AM
Last Updated : 24 May 2022 11:49 AM

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் திறந்து வைத்தார்

மேட்டூர்: சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, மேட்டூர் அணை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். அதேநேரம் அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும்.

அணை வரலாற்றில் கடந்த 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 முறை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னர் நீர் திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 13,074 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (மே 23) 12,777 அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 116.88 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 117.28 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 89.19 டிஎம்சி-யாக உள்ளது.

இன்றைய தினம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்து சேரும். கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையில் திறந்து விடப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களில் கடைமடையை தண்ணீர் சென்று சேரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x