Published : 24 May 2022 07:00 AM
Last Updated : 24 May 2022 07:00 AM

தமிழகத்தில் 1,997 கிராமங்களில் ரூ.277 கோடி மதிப்பில் கலைஞர் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். உடன் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர்.

சென்னை: தமிழகத்தில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும், தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்கும் நோக்கில் 1,997 கிராமங்களில் ரூ.277 கோடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஆக. 14-ம் தேதிதாக்கல் செய்தார். அதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறு வகை விதைகள் தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஊக்கத்தொகை பழக்கூடைகள் மற்றும் டிரம், பழச்செடிகள், மரக்கன்று தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை, குழாய் கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாருதல் போன்றவை கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த புதியதிட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்நேற்று தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு ஆழ்துளை அமைப்பதற்கான பணி ஆணை, மரக்கன்றுகள், பண்ணை குட்டை உள்ளிட்டவை அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது: உழவர்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசுக்கு இயற்கையும் நல்ல ஒத்துழைப்பு நல்குவதால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24-ம் தேதி (இன்று) மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளேன்.

தமிழக வளர்ச்சிக்காக 7 அம்ச திட்டங்களில் ஒன்றான மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும், தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இத்திட்டமானது தமிழகத்தில்உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும்.

தற்போது 2021-22 ஆண்டில் 1,997 கிராமங்களில் ரூ.277 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்றம் காண வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அந்த அடிப்படையில் அவரது பெயரை இத்திட்டத்துக்கு வைத்துள்ளோம்.

கிராமங்களில் உள்ள தரிசுநிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்கி சூரிய சக்தி பம்ப்செட்களுடன் நுண்ணீர் பாசன வசதிஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித் துறை மூலம் பண்ணை குட்டை அமைத்தல், வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய் துறை மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு, குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவு பயிர்க் கடன்கள் அதிகமாக வழங்குதல், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து வேளாண் துறையின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்கள் தன்னிறைவு அடைவதுடன், நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வதும் தடுக்கப்படும்.

கிராம வளர்ச்சி பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இக்காலகட்டத்தில், கிராமத்தில் உள்ள அனைத்து உழவர்களையும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் மு.அப்பாவு,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x