Published : 21 May 2022 06:00 AM
Last Updated : 21 May 2022 06:00 AM

குடியாத்தம் | அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு அறுவை சிகிச்சை அரங்கால் குடியாத்தம் அரசு மருத்துவர்கள் திணறல்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தற்காலிக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க கோரி மருத்துவ அலுவலர் மாறன் பாபு தலைமை யிலான குழுவினர் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் ஒரே அறுவை சிகிச்சை அரங்கு மட்டுமே இருப்பதால், அனைத்து வகை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினசரி 2,500-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சராசரியாக 200 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். குடியாத்தம் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையை நம்பி யுள்ளனர். ஆனால், குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் போதிய இடவசதி இல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியாத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் அமலு விஜயனை, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு தலை மையில் மருத்துவர் மஞ்சுநாதன் மற்றும் செவிலியர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு அறுவை சிகிச்சை அரங்கு மட்டும் இருப்பதால் கூடுதலாக ஒரு தற்காலிக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க நிதியுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்து வர்கள் தரப்பில் விசாரித்த போது, ‘‘குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடம் விரைவில் இடிக்கப்பட்டு அங்கு ரூ.6 கோடி மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டப்படவுள்ளன. இதற்காக அந்த கட்டிடம் இரண்டு வாரங்களில் இடிக்கவுள்ளனர்.

தற்போது அரசு மருத்துவ மனையில் தினசரி சராசரியாக 6 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இதில், 4 மகப்பேறுடன் எலும்பு முறிவு, காது, மூக்கு-தொண்டை பிரிவு மற்றும் கண்ணில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சையும் நடை பெறுகிறது.

பழைய கட்டிடம் இடிக்கப் படும்போது அங்குள்ள அறுவை சிகிச்சை அரங்கமும் இடிக் கப்படும். அங்கு கேட்ராக்ட் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. சீமாங் கட்டிடத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் மகப்பேறு அறுவை சிகிச்சையுடன் எலும்பு முறிவு, பொது அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. பழைய கட்டிடம் இடிக்கும்போது கண் அறுவை சிகிச்சையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தற்போதுள்ள அறுவை சிகிச்சை அரங்கில் கூடுதலாக அறுவை சிகிச்சை செய்வது சிரமமான பணியாக மாறிவிடும். இதற்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரில் காலியாக உள்ள அறையில் தற்காலிகமாக ஒரு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை அரங்குக்கு தேவையான தளவா டங்கள் வாங்குவதுடன் கட்டமைப் பையும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்பதால் சட்டப்பேரவை உறுப்பினரிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. விரைவில், தற்காலிக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x