Published : 18 May 2022 06:51 AM
Last Updated : 18 May 2022 06:51 AM

மின்சார ரயிலில் தொங்கிக் கொண்டு சென்ற கல்லூரி மாணவர் கம்பத்தில் மோதி உயிரிழப்பு

தாம்பரம்: தாம்பரம், இரும்புலியூரில் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மறைமலை நகர் அருகே பேரமனூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் ஜெஷூரன் துரை (18). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு மறைமலை நகரிலிருந்து ரயில் மூலம் பயணம் செய்வது இவரது வழக்கம். செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் மின்சார ரயிலில் மறைமலை நகரிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு ரயிலில் தொங்கியபடியே இவர் நேற்று பயணம் மேற்கொண்டார்.

அப்போது இரும்புலியூர் அருகே, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்ததில், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸார் கூறும்போது, “மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை சில மாணவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் சிலர் எச்சரித்தாலும் கேட்பதில்லை. படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மாணவர்கள் அதைக் கேட்காமல் படிக்கட்டில் தொங்கி உயிரிழந்து வருகிறார்கள். எனவே இதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் ரயில் பாதையில் இரு பக்கங்களிலும் நெருக்கமாக மின்கம்பங்கள் இருப்பதே இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x