Published : 17 May 2022 06:58 AM
Last Updated : 17 May 2022 06:58 AM

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்குவது சாதகமா, பாதகமா?

பி.எஸ்.அமல்ராஜ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வரும் சூழலில், இது சாதகமா, பாதகமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும், ‘‘நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட்டால்தான் பாமர மக்களுக்கும் நீதி பரிபாலனம் எளிதாக கிடைக்கும்’’ என்ற கருத்தை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலினும் சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்: தமிழில் சட்டம் பயின்றுவழக்கறிஞர்களாக பதிவு செய்யும் பல ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலம் இன்னும் அந்நிய மொழியாகவே உள்ளது. ஆங்கிலத்தில் வழக்கு நடப்பதால், நீதிமன்றத்துக்குள் என்ன நடக்கிறது என்பது வழக்காடிகளுக்கு புரியாத புதிராகவே இருக்கும். அதேநேரம், தமிழில் வழக்கை நடத்தினால் வழக்காடிகளுக்கும் முழு மனநிறைவு கிடைக்கும். வழக்கின் சாதக, பாதகமும் தெளிவாக புரியும். தமிழை அலுவல் மொழியாக்குவதில் உள்ள ஒரே பிரச்சினை சட்டநூல்களை மொழிமாற்றுவதுதான். அந்த குறையும் நிவர்த்தி செய்யப்படும் என முதல்வரே அறிவித்திருப்பதால் அதுவும் பெரிய பிரச்சினையாக இருக்காது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ஆர்.சுதா: அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348(2)-ன்படி, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி அல்லதுஅந்தந்த மாநில மொழிகளை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார் உயர் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது.

அதை பின்பற்றி, சாமானிய மக்களுக்கும், நீதித் துறைக்கும் உள்ள சட்ட இடைவெளியை குறைக்க தமிழகத்திலும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக விரைவில் அறிவிக்க வேண்டும். தற்போது ஜூரிஸ்-ப்ரூரிடியன்ஸ் போன்ற ஆங்கிலத்தில் உள்ள சட்ட நூல்கள், சட்ட விளக்கங்களை தமிழில் அப்படியே மொழிபெயர்க்க முடியாது. தற்போது தமிழில் வாதிட விரும்புவோரை ஒருசிலநீதிபதிகள் அனுமதிக்கின்றனர். ஆனால், அதைசட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம், தமிழை அலுவல் மொழியாக்குவதில் நீதித் துறைக்கு நிறைய கஷ்டம் இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கக் கோரி போராட்டத்தை முன்னெடுத்த மதுரை வழக்கறிஞர் கே.பகவத்சிங்: தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தால் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்கும், மறுபுறம்குறையும்.

இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தொழில் வாய்ப்புகிடைக்கும். உயர் நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வந்தால், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் இன்னும் திறமையாக நடைபெறும். இது நவீன தொழில்நுட்ப யுகம். ஒருவேளை வழக்கறிஞர் தமிழில் பேசினாலும், காதில் மைக்கைமாட்டினால் நாடாளுமன்றம்போல நீதிபதிகளுக்கு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து கேட்கப்போகிறது. அவ்வளவுதான்.

உயர் நீதிமன்ற முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத்: தாய்மொழியான தமிழில் வாதிட்டால் சட்டம் தொடர்பான புலமையோடு, வாதத் திறமையும் அதிகரிக்கும். வழக்கின் தீவிரத்தையும், தன்மையையும் நீதிபதிகளுக்கு எளிதாக புரியவைக்க முடியும். கிராமப்புறங்களில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகளுக்கும் சட்டத்தின் பலன் முழுமையாக சென்றடையும்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் ஆங்கில தீர்ப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதால் பலருக்கு வேலை கிடைக்கும். தீர்ப்புகள் தமிழில் வரும்போது இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பைந்தமிழுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அதற்கு தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள், மொழிமாற்ற வசதிகளை கீழ்நிலையில் இருந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x