Published : 17 May 2022 07:51 AM
Last Updated : 17 May 2022 07:51 AM

எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவுப் பணிகளை நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணிகளை ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் “அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணிகள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம்” மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் ஆக மொத்தம் 10,402 கண்டறியப்பட்டன. இப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 27 (எச்)-ன்படியும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளால், தெரிவு முகமைகள் மூலமாக நிரப்பப்படும்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொகுதி வாரியாக கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை அத்தொகுதியின் கீழ்நிலையில் உள்ள நேரடி நியமனப் பதவிகளில் நியமிக்க துறைத் தலைவர் தலைமையிலான குழுவை உருவாக்க வேண்டும். அத்தொகுதியில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து உரிய செயல் ஆணை தெரிவு முகமைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்பட வேண்டும்.

இது துறை தலைமை அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் என இடஒதுக்கீட்டை பின்பற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

காலிப் பணியிடங்கள் இல்லாத நேர்வுகளில் குறைவுப் பணியிடங்களை நேரடி நியமனப் பதவிகளில் நியமனம் மேற்கொள்வதற்கு வரும் ஆண்டுகளில் உருவாகும் காலியிடங்களின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளத்தக்க வகையில் ஆணைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் அனைத்து பதவிகளும் நிரப்பப்படாத நேர்வில் குறைந்த அளவிலான குறைவுப் பணியிடங்கள் உள்ள பதவிகளுக்கு தெரிவு முகமைகள் உரிய முடிவுகளை மேற்கொண்டு நிரப்புவதற்கான உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்பலாம்.

ஒரே பதவியில் குறைவுப் பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் காணப்படும்போது, தெரிவு முகமைகளால் முதலில் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிவிட்டு, பின்னர் வேறுபாட்டினை குறைவுப் பணியிடங்களில் நிரப்பலாம்.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x