Published : 08 May 2016 11:05 AM
Last Updated : 08 May 2016 11:05 AM

கேரள மக்களின் வாக்குகளுக்காக: ஒரே மேடையில் 4 அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் வசிக்கும் கேரள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் ஒரே இடத்தில் வாக்கு சேகரித்தனர்.

தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால், கேரள மக்கள் ஏராளமானோர் கோவைக்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர். வாக்குரிமை உள்ளிட்டவை கூட கோவையிலேயே பெற்றுள்ளனர். கோவையின் நகர்ப்புற மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் கேரள மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கேரள மக்களின் வாக்குகள் அவசியமானதாக இருக்குமென்பதால் அரசியல் கட்சியினர் அனைவரும் அவர்களது வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டா முத்தூர் சட்டப்பேரவைகளுக்கு உட்பட்ட கேரள மக்கள் வசிக்கும் பகுதிகளில் நூதனமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் ஒரே இடத்தில் கூடி, கேரள மக்களின் வாக்குகளைச் சேகரிக்க பிரச்சாரம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளரான பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு தொகுதி வேட்பாளர் கே.அர்ச்சுணன், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆகிய 4 பேரும், கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் அருகே நேற்று இப்பிரச்சார இயக்கத்தை நடத்தினர். அதில், கோவையில் வசிக்கும் கேரள மக்களுக்கான பிரச்சினைகளை அவர்கள் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்து வாக்கு கேட்டனர்.

இதற்கு முன்பாக தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மலையாளத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கேரள மக்களின் வாக்குகளைச் சேகரித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் ஒரே மேடையில் வாக்கு சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மலையாளத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கேரள மக்களின் வாக்குகளைச் சேகரித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் ஒரே மேடையில் வாக்கு சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x