Published : 13 May 2022 05:43 AM
Last Updated : 13 May 2022 05:43 AM

உலக செவிலியர் தினக் கொண்டாட்டம் | ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் விருது: செவிலியர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலைத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மெழுகுவத்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: சிறப்பாகப் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பெயரில் விருது வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்றுஉலக செவிலியர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தனர். இதில், மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் மெழுகுவத்தி ஏந்தி, செவிலியர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டபோது, சிறப்பாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் நோயாளிகளைக் காப்பாற்றிய மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "மருத்துவத் துறையில் உறவினர்களைப்போல சேவைபுரிபவர்கள் செவிலியர்கள். எனவே, செவிலியர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதன்படி, வரும் ஆண்டுகளில் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பெயரில்,சிறப்பாகப் பணிபுரியும் செவிலியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதும், அடுத்த வருடம் சேர்த்து வழங்கப்படும்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (எம்ஆர்பி) 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம்‌. கரோனா காலத்தில் மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும்,அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும் போது, "பொதுமக்களின் காப்பாளர்கள் மருத்துவர்களும், காவலர்களும்தான். இருவரும் இரட்டைக் குழந்தைகள் போன்றவர்கள். அத்தகைய மருத்துவர்களுக்கு, உடலும், உயிருமாகத் திகழ்கின்றனர் செவிலியர்கள்" என்றார்.

இந்த விழாவில், சென்னை மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x